Sunday, December 7, 2008

ஆப்பிள் சதி




பாம்புருச் சாத்தானின்
பிரதான வைரி
கடவுள் தானெனில்
ஏன் ஆதாமும் ஏவாளும்
தண்டிக்கப்பட்டனர்
சூன்யங்களுக்கோ
கொடுங்கோன்மைக்கோ
சுவர்க்கத்தின் கதவுகள்
வழிவிடாதெனில்
அங்கெப்படிச் சாத்தான்?
கடவுளின் சுட்டுக்கு
எதிர் சுட்டும்
நெளிந்த சாத்தானின்
வியூகக் காய்களெனப்படுகிறார்கள்
ஏவாளும்
சபிக்கப்பட்ட கனியும்
இப்படியும் இருக்கலாம்
ஏவாள் பேரழகியெனில்
ஆதாம் மீதான
பொறாமையிலும்
நிகழ்ந்திருக்கலாம் ஆப்பிள்சதி.

சௌந்தர்யா




நேற்று சௌந்தர்யா என்னுடன்படுக்கையிலிருந்தாள்


பாதங்களிலிருந்து உச்சி வரை

என் செயலுக்கு

கைவிரல்களில் சிக்கி விரிப்புகள் கசங்கின

தன்னை வீணாக்கியவனென்று

அவளால் சொல்லப்பட்டவன்

திறக்காமலே கொண்டு சென்று விட்ட

பேரன்பின் இரகசிய அறைகளை

தேடும் வேட்கை

அவளின் கண்களில் தெரிந்தது

நானும் இறக்கி வைத்தாக வேண்டும்

கால்களில் மென்மையாகப் படர்ந்திருந்த

ரோமங்களை

உதடுகளால் கவ்வி இழுத்தேன்

சன்னலுக்கு வெளியே மிதந்த

நட்சத்திரங்களில் ஏதோ ஒன்றில்

ஒளியாய்க் கலந்தோம்.

உள்ளும் புறமும் குளிர்ந்து கிடந்த

விடியற்காலையில்

எவ்வளவு மறுத்தும் திரும்பத் திணித்தாள்

கசங்கிய ரூபாய்களை

கதவுகள் திறந்ததும்

காத்திருந்த வெளிச்சம்

தாவிப் பாய்ந்தது

மிச்சங்களைத் தின்பதற்காக

மெலிதாகப் புன்னகைத்து விடை பெற்றாள்.

Friday, September 26, 2008

நட்சத்ரமளவு...


ஷவர் வியர்க்க வியர்க்க
அப்போது தான் துவங்கியிருந்த
உன் மென் ஸ்தனங்களில் துழவி நெளிந்து
குளியலறைச் சல்லடைத் துவாரங்களில்
பிறவி முற்றுப் பெற்ற நீரின்
போதி கடந்த இளமதியத்தில்
இரண்டாம் நாள் பள்ளிக்கூடம் போகப் பயந்து
மூத்திரமிருந்து காய்ந்த கால்சட்டைக்காரனின்
வானங்களில்
நட்சத்திரங்களிடுவது குறித்துப் பதிந்தாய்
இயல்பானது போல
தகரக் கதவினை மெல்லத் திறந்த
ரப்பர் ஸ்பிரிங் வளையல் கரத்தை
இராஐ திராவகத்தாலும் கரைந்து விடாத
இருதயத்தில் இன்னமும் அடைகாக்கிறேன்
போதாது போதுமெனத் தோன்றாது விரிந்த
என் வானங்களுக்கு
நட்சத்ரங்கள் வேண்டி
ஓடித் தீராத தூரங்களில்
வானம் விற்று, வானம் விற்று
இருளும் பகல்களும் சாயம் போன
நட்சத்ர விரிப்பில்
வெகாரித்து மல்லாந்து கிடக்கிறது
இன்னுமொரு முறை
உடையுரித்து புதுப்பித்த என் நாகம்

வெளுத்துப் படர்ந்த வானங்களில்
முற்றுப் பெறாமலேயிருக்கிறது
இப்போது பருத்துச் சரிந்திருக்கும் ஸ்தனத்திற்கோ
போதி நுழைந்த நீருக்கோ
தவமிருக்கும் நட்சத்திரமளவு வெறுமையொன்று...

( நெசிம்பானுவுக்கு...)

Saturday, September 20, 2008

வெளியே நிகழ்வு


கதவுகளை இறுகத் தாழிடு
கண்களையும் மூடிக்கொள்
காதுகளின் துவாரத்தை
ஆள்காட்டிவிரல்களால்நிரப்பு
தேவையெனில்முழு பிரக்ஞையற்றும் இரு
ஓலமிட்டபடிதான்
எரிந்து கொண்டிருப்பேன்வெளியே

மிக அடர்ந்த தனிமையினூடாக செல்லும் அவளுக்கு


புலிகள் குறித்து அத்துப்படியாகியிருக்கும்
உன் ஆன்மாவின்
கீறலையொத்த கிழிசலின் வழியே
கழிவிரக்கம் வேண்டி நுழைகிறது
பற்களைப் பிரயோகிக்கும்
சூத்திரம் மறந்ததாய்ச்
சொல்லும் என் புலி
தொலைந்து போய்விட்ட
வெளிர்நிறப் பூனைக்குப் பகரமாகவோ
இருள் படர்ந்த இரவுகளில்
அக்குள்களுக்கிடையே புகுந்து நிகழ்த்தும்
கதகதப்புக்காகவோ
தனிமையின் நெடுவழிகளில்
அதை துணை சேர்க்கிறாய்
வலியும் சுகமும் பிணைந்த நீளங்களில்
இடையிடையே இருட்டு
களைப்பின் கறை படிந்த சாயங்காலங்களில்
உலர்ந்து போன உன் சருமத்தை
தன் நாவால் வருடுகிறது
சுகிக்காதே
அதற்குத் தெரியும்
நாவுகளால் மாம்சம்
தின்னும் மந்திரம்.

123 விளையாட்டு


நிபந்தனைகளற்ற இவ்வாட்டத்தில்
நாங்கள் 123 மட்டும் சொல்வோம்
நீங்கள் ஓட வேண்டும்
மரணத்தைத் துரத்த ஓடும் புல்லுண்ணியைப் போல
ஏறக்குறைய
உங்கள் சூழலும் அதுதான்
கொரில்லாவாய்ப் பதுங்கிப் பாய்ந்து
தொண்டைக் குழிகளைக் குதறவோ
சங்கிலிகளால் பிணைத்து
நகரவியலா உங்கள் சுயம் ரசிக்கவோ
உமிழ்ந்தே பழக்கப்பட்ட எங்கள் துப்பாக்கிகள்
உடல்களில் ரவைகளை நுழைக்கவோ
உங்கள் சனங்களின் குறிகளை
உங்களைக் கொண்டே அறுக்கப் பணித்தோ
எதுவும் நடக்கலாம்
நீங்கள் ஓடியாக வேண்டும்
நாங்கள் 123 மட்டும் சொல்வோம்
விதிமுறைகள் குறித்து
மாற்றுக் கருத்தேதுமிருந்தால்
வெள்ளை யோனிகளிலிருந்து
வழிந்த திரவம் தோய்ந்த
துணிகளைக் தருகிறோம்
வேண்டுமானால்
வாயில் கட்டிக் கொண்டு
போராடுங்கள்...
போராடுங்கள்...

காலத்தின் சிலுவை


காலம் தன் தெருக்களில் என்னை
சாட்டையாலடித்தபடி இழுத்து வருகிறது
கந்தலாடையுடன்
படர்ந்த மணற்பரப்பில் குருதியிறைத்தபடி
கடந்த காலங்களின்
சிலுவையின் கணம் அழுத்த அழுத்தச் சரிகையில்
மண்குடுவையிலிருந்த தண்ணீரை
நாவுகளுக்கு வார்க்கிறாய்
காவற்காரனின் சவுக்கடிகளை ஏற்றுக் கொண்டவளாய்
நான் சிலுவையில் சார்த்தப்படுகிறேன்
பெருவிரல் நுனியிலிருந்து
மெள்ளத் தளர்ந்து
கண்களில் நிற்கிறது என் ஆத்மரசம்
நீ தண்ணீர் வார்க்கிறாய்
விடைபெறுதலுக்கான கையசைப்புகள்
அடக்கித் தோற்று பீறிடும் கண்ணீர்
மெல்லப் புதைகிறது இமைகள்
யுகாதி யுகங்களுக்கான பேரன்பை நிறைத்துக் கொண்டு